Image result for Twenty20

போட்டி நடுவரின் தவறான முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான நிரோஷன் டிக்வலவிற்கு இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்க சர்வதேச கிரிக்கட் சபை தடை விதித்துள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் ஜேம்ஸ் போல்க்னர் வீசிய பந்தை இலக்கு காப்பாளருக்கு மேல் தூக்கி அடிக்க முனையும் போது இலங்கையின் தொடக்க வீரரான டிக்வல இலக்கு காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்ததாக போட்டி நடுவர் சைமன் ஃப்றையினால் அறிவிக்கப்பட்டார். இதற்கு மாறாக, மறுகாண்பிப்பின் பொழுது பந்து துடுப்பாட்ட வீரரின் மட்டைக்கு பதிலாக அவரது தோளின் மேல் பட்டு மேல் எழுந்தது நிரூபணமானது.

தனக்கு எதிராக கொடுக்கப்பட்ட தவறான முடிவினால் ஏமாற்றமடைந்த டிக்வல, விரக்தியின் காரணமாக களத்தை காலால் உதைத்தார். இதன் காரணமாக டிக்வலவின் போட்டி ஊதியத்தில் இருந்து 30% அபாரதாமாக விதிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது, டிக்வலவின் குற்றப்புள்ளிகள் இரண்டு புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டன.

இது சம்பந்தாமாக சர்வதேச கிரிகட் சபை விடுத்துள்ள அறிக்கையில், “டிக்வல போட்டி மறுகாண்பிப்பைப் பார்வையிட மைதானத்தில் காத்திருந்தார். களத்தை காலால் உதைத்து, தனது தோளை அதிக நேரம் பார்த்தவாறு நின்றார்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்வல ஏற்கனவே தென்னாபிரிக்க அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியின் போது ககிசோ றபடாவுடன் மோதிக்கொண்டதற்காக 3 குற்றப்புள்ளிகளை பெற்றுகொண்டிருந்தார். அவரது மொத்த குற்றப்புள்ளிகள் ஐந்தாக உயர்ந்ததை அடுத்து, அவருக்கு இரண்டு மட்டுபடுத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் டிக்வல பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அணியில் உள்ள தொடக்க நிலை வீரரான டில்ஷன் முனவீர டிக்வலவின் இடத்தில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்வலவின் தடை காரணாமாக டசுன் சானக அல்லது லக்சன் சந்தகன் அணியில் இணைக்கப்பட கூடும். இலங்கையின் ஸ்திரமான பந்து வீச்சு மற்றும் வலுக்குறைந்த துடுப்பாட்டம் காரணாமாக டசுன் சானக அணியில் இடம் பெற சந்தகனை காட்டிலும் அதிக வாய்புகள் உள்ளன.

டிக்வல அவரது கன்னி டெஸ்ட் போட்டியின் பொழுது நியாயமற்ற பிடி எடுப்பிற்காக முறையீடு செய்ததற்காக அவரது போட்டி தொகையில் இருந்து 10% அபாரதாமாக விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.